குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்தபோது விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேவலமாக சிரித்தார் என்றும் அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்கள் இன்று காவுகொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை0 இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் பாலம் நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கிய விபத்தில் இதுவரையில் 10 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இதில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளாக காணப்படுகின்றனர்.இதுவொரு பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னர் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பியபோது, குறித்த இடத்தில் பாலத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர், அதற்கான பதில் பாதையொன்றை நிர்மானிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கோரியிருந்தேன். இதைக் கேட்ட இராஜாங்க அமைச்சர் கேவலமாக சிரித்தார். அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்கள் இன்று காவுகொள்ளப்பட்டுள்ளன.
எனவே குறித்த பாதை சட்டபடி இயங்குகிறதா? எந்த அனுமதியுடன் இயங்குகின்ற பாதை? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.