ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இலங்கை ஊடக கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களின் பயன்பாடு மற்றும் நடத்தை பற்றிய தொழில்சார் திறன்கள் மற்றும் கல்வியுடன் கூடிய ஊடகவியலாளர்களை முன்வைப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டது.
உலகளாவிய போக்குகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் துறைகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது எனவும் ஊடக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, ஊடகவியலாளர்கள் மற்றும் வெகுஜன ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை திருத்துவதற்கான தேவை அங்கீகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ஊடகம், சந்தைப்படுத்தல், கல்வி, சட்டம், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவமுள்ள நபர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக ஊடகத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.