இலங்கையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (Extended Producer Responsibility – EPR) தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில், அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டம், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களையும் உள்ளூராட்சி மன்றங்களையும் ஒருங்கிணைத்து, கழிவுகளை சரியான முறையில் மீளச் சேகரித்து முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். ‘Collect-back’ எனப்படும் மீளச் சேகரிக்கும் மூலோபாய முறையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கடந்த காலங்களில் இலங்கை சமூகத்தில் இயற்கை பொருட்களால் ஆன பொதியிடல் முறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றம் மற்றும் வசதி மயமான வாழ்க்கை முறையின் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, அது இன்று பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, வருடாந்தம் இலங்கையில் 1.6 மில்லியன் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. தினசரி சுமார் 938 மெட்ரிக் தொன் கழிவுகள் உருவாகும் நிலையில், அவற்றில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மேலும் மொத்த கழிவுகளில் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சமநிலையின்மையால், கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அதிக பங்களிப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலையளிக்கும் விடயமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டம் முன்னோடி முயற்சியாக மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற சுத்தமான சூழலை உருவாக்க அரசாங்கம்,உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அனுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபய கழிவு முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்காக விசேட குழுக்களை நியமித்திருந்தார் என வரலாற்றை நினைவுகூர்ந்தார். அந்த காலகட்டத்தில் சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது இரவும் பகலும் புண்ணியம் சேர்க்கும் செயல் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அந்த காலத்தில் மக்கள் பனை ஓலை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொதியிடல் முறைகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் வசதியும் இலாபமும் முன்னிலைப்படுத்தப்பட்டதால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, அது சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இது வெறும் கோஷமாக மட்டுமே இருக்காமல், நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பு, உற்பத்தியாளர்களின் பொறுப்பு மற்றும் பொதுமக்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் உண்மையான ‘System Change’ ஆக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். கொடிப்பிலி ஆராச்சி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ, தேசிய திடக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் புஷ்ப குமார, இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர் நிறுவனத்தின் தலைவர் அசேல இடவெல, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மான்னப்பெரும உள்ளிட்ட பல அதிகாரிகளும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.















