கனடா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஐந்து பேரிடமிருந்து சுமார் 80 இலட்சம் (8 மில்லியன்) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தனது நண்பரிடமே 6 இலட்சம் ரூபாய் மோசடி செய்த மற்றொரு சந்தேகநபரும் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கனடா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகப் போலி வாக்குறுதி அளித்து, இவர்களிடமிருந்து தலா ஒரு குறிப்பிட்ட தொகையாக மொத்தம் 80 இலட்சம் ரூபாயைச் சந்தேகநபர் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவருக்கு எதிராக யாழ்ப்பாணம் – மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் பல புகார்கள் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், 100,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் கட்டளையிட்டது.
இதேவேளை, கம்பஹா, அப்பர் இம்புல்கொட பகுதியில் “ஜப்பான் மார்ட்” என்ற பெயரில் வர்த்தக நிலையம் நடத்தி வந்த ஒருவரே தனது நண்பரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குப் பணியாளர்களைப் பரிந்துரைப்பதற்கான எவ்வித சட்டப்பூர்வ உரிமமும் (License) இல்லாத நிலையில், ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தனது நண்பரிடம் முதலில் 28 இலட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட நண்பர் சந்தேகநபரின் கணக்கில் 1 இலட்சம் ரூபாயையும், அவரது மனைவியின் கணக்கில் 5 இலட்சம் ரூபாயையும் வைப்பிலிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு மோசடி செய்யப்பட்ட முழுத் தொகையான 6 இலட்சம் ரூபாயையும் திருப்பிச் செலுத்தியதன் பின்னர், 200,000 ரூபாய் அபராதப் பணத்தைச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான தொடர் மோசடிகளைத் தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.












