இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின் 15ஆவது அத்தியாயம், அடுத்த ஆண்டு ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரின் ஆரம்ப போட்டி, சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் போட்டியில், நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இதுவரை போட்டி அட்டவணை இறுதி செய்யப்படவில்லை.
குறிப்பாக இந்த ஐ.பி.எல். தொடரில், புதிதாக ஹமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இத்தொடர், நீண்ட தொடராக அமையவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நவம்பர் 30ஆம் திகதிக்குள் உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஐ.பி.எல். அதன் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறும்.
இதன்படி, நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, அடுத்த மூன்று இந்தியன் பிரீமியர் லீக் சீசன்களுக்கு தனது நீண்டகால அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
டோனியைத் தவிர, சி.எஸ்.கே. 2021 ஐ.பி.எல். சம்யின் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்த சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அத்துடன் இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலியுடன் சி.எஸ்.கே. அணி, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அலி தொடர சம்மதிக்கவில்லை என்றால், சி.எஸ்.கே. அணி, இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சேம் கர்ரானை நான்காவது வீரராகக் தக்கவைத்துக் கொள்ளும்.
இதற்கிடையில், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், சகலதுறை வீரர் அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரை டெல்லி கெப்பிட்டல்ஸ் தக்க வைத்துக் கொள்ள உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது. அவர்களின் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் கீய்ரன் பொல்லார்டுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த உரிமையானது சூர்யகுமார் யாதவை ஏலத்தில் இருந்து வாங்க விரும்புகிறது. மேலும் இஷான் கிஷான் தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
கோயங்காவின் புதிய லக்னோ அணிக்கு இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல.; ராகுல் தலைமை தாங்குவார் என நம்பப்படுகின்றது. பஞ்சாப் கிங்ஸிலிருந்து ராகுல் விலகியதாகவும், கோயங்காவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது இரண்டு சகலதுறை வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அவர்கள் வருண் சக்ரவர்த்தியையும் வைத்திருக்க விரும்புகிறார்கள். சுப்மான் கில் அல்லது வெங்கடேஷ் ஐயரை தக்கவைப்பதா என்பது குறித்து கொல்கத்தான அணி, இன்னும் முடிவெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.