லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தடையை எதிர்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 60 வேட்புமனுக்கள் தாக்கலாகியுள்ளன. பெண் உரிமைப்போராளியான லீலாபென் கலிபா (வயது 46) மட்டும்தான் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வலிமை வாய்ந்த தலைவராக அங்கு கருதப் படுகிற கல்பா ஹப்தாரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர் கொள்வதால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிபியா இராணுவ சட்டத் தரணிகள்தான் இவர்கள் இருவரது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் ஜனாதிபதியாக உள்ளார்.
லிபியாவின் ஜனாதிபதியாக 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் முஅம்மர் அல் கடாபி.
40 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடாஃபியின் ஆட்சி, கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களால் சயீஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரில் கடாஃபி கொல்லப்பட்டார். சயீஃபை கைது செய்து வைத்திருந்த அபுபக்கர் அல்-சித்திக் என்ற அமைப்பினர் அவரை 2017ஆம் ஆண்டு விடுவித்தனர்.