கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றவேளை அங்கு கலந்து கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடரந்து குறித்த அமர்வில் கலந்து கொண்ட 14 உறுப்பினர்களுடன் ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒரு எழுதுனர் ஆகியோர் கடந்த புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தனிமைப்படுத்தலை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.