இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காதமையினால் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தேசிய உடல் உறுப்பு தான தினம் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல வைத்தியர் மனோஜ் குமார் சாஹு, இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவது குறித்து உரை நிகழ்த்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காதமையினால் இந்தியாவில் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 1.5 இலட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவை என்ற நிலையில், இந்தியாவில் வருடத்துக்கு 5 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அறுவை சிகிச்சை இடம்பெறுகின்றது. அதேபோன்று சுமார் 2 இலட்சம் பேர் கல்லீரல் தானம் கிடைக்காததால் இறக்கின்றனர்.
அந்தவகையில் இந்தியாவில் உடல் உறுப்பு தான விகிதம் 0.01 சதவிகிதம் மாத்திரமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன” என வைத்தியர் மனோஜ் குமார் சாஹு குறிப்பிட்டுள்ளார்.