புதிதாக கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு வைரஸ் பரவலை தடுக்க அடிப்படை சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கேட்டுக்கொண்டார்.
உலகில் கண்டறியப்பட்ட ஐந்தாவது கொரோனா மாறுபாடான ஓமிக்ரோன் வைரஸ் அதிக பரவல் தன்மை கொண்டது என அவர் தெரிவித்தார்.
உறுதியான மற்றும் நிரூபிக்கப்பட்ட தரவு இல்லை என்றாலும் தடுப்பூசியினால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியினால் இதனை எதிர்கொள்ள முடியும் என கணிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இருப்பினும் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மக்களும் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ள அதே நேரத்தில் டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புதிய மாறுபாட்டுடன் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்ட வைத்தியர் சந்திம ஜீவந்தர, அடிப்படை சுகாதார நடைமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதால், அவர்கள் மூன்று மாதங்கள் கழித்து ஒரு பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.