தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று(செவ்வாய்கிழமை) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நீர்நிலைகள் நிரம்பி இருப்பதால், ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தேனி, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தர விட்டுள்ளனர்.