ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
மேலும் இந்த மாறுபாடு சில பிராந்தியங்களில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெட்ரோஸ் அதானோம் அழைப்பு விடுத்தார்.
இந்த மாத தொடக்கத்தில் குறித்த மாறுபாடு தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது மீண்டும் தொற்றக்கூடிய அதிக அபாயம் இருப்பது ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது.
ஓமிக்ரோன் மாறுபாடு நாட்டில் கண்டறியப்பட்டுள்ளமையை உடனடியாக அறிக்கையிட்டதை அடுத்து தென்னாபிரிக்காவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதிய மாறுபாட்டின் பரவல், மீண்டும் தொற்றும் அபாயம் மற்றும் தடுப்பூசிகளின் பிரதிபலிப்பு குறித்து கண்டறியும் பணியில் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.