யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.மாவட்டத்தில் மழை உடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த வாரம் வரை டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுகின்றது.
கடந்த வாரம் வரை 133பேருக்கு, டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
டெங்கு அதிகமாக செப்டம்பர், ஓக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.
அதனடிப்படையிலேயே சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம்.
அதற்கிணங்க டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.
அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தினை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி, அந்த வாரம் யாழ்ப்பாண குடாநாடு பூராகவும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள இருக்கிறோம்
அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடாத்தி, அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டினை மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.