மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (வியாழக்கிழமை) அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.
அசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்த பின்னர் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வழக்கின் முறைப்பாட்டாளர்களான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது கட்சிக்காரருக்கு எதிராக தீங்கிழைக்கும் முறைப்பாட்டொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 17 (2)வது சரத்தின் கீழ் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி, குறித்த முறைப்பாட்டை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுவதாக உத்தரவிட்டதுடன், மூன்று மனுதாரர்களையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.