வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அச்சம்பவத்தை பொறுப்பேற்க அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்ற தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
52 நாட்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வவுணதீவு கொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் பக்கம் கொண்டு செல்ல ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் சஹரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் அவர்களை கைது செய்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும் ஆனால் அந்த சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கத்திற்கு திருப்ப வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.
இதேவேளை சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய ஆவணங்கள் இருந்த கணனிகளை பயன்படுத்திய நபர்கள் யார் என்ற தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.