இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் மகாராஷ்டிரால் 7 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகைத் தரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் டெல்லி விமானநிலையத்திற்கு வருகைத் தந்த 17 பேரில் 12 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதியாகுவோரின் மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.