மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மியன்மாரின் மிகப்பெரிய நகரமான யாங்கூன் நகரில் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தவர்களின் மீது பின்புறமாக விரைந்து வந்த இராணுவ வாகனம் மோதும் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும் மியன்மார் சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிரான சுமார் ஒரு டஸன் கிரிமினல் வழக்குகளில், முதல் தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற பேரணிகள் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்படுவார் என்ற பயத்தில் பெயர் குறிப்பிடாமல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒருவர், ‘சுமார் ஐந்து ஆயுதம் ஏந்திய வீரர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, எதிர்ப்பாளர்களைத் துரத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் மற்றும் காரில் மோதிய இளைஞர்களையும் கைது செய்தனர்’ என கூறினார்.
இது 20 வயதிற்குட்பட்ட மற்றும் பலத்த காயமடைந்த இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் வீதியில் இரண்டு நிமிடங்களே இருந்ததாக கூறப்படுகின்றது.
காயமடைந்த மூன்று பேர் உட்பட 11 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இராணுவம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து போராட்டக்காரர்களை தாக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தொகுத்துள்ள விரிவான பட்டியலின்படி, இதுவரை சுமார் 1,300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.