லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ், கண்டி வரியர்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொண்டுள்ளன.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி வரியர்ஸ் அணி முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜப்னா கிங்ஸ் அணி 3 ஆவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அணிக்கு தலா 14 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டு மீளவும் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது ஜப்னா கிங்ஸ் அணி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபக்கத்தில் ஓட்ட சராசரியைச் சரியவிடாது துடுப்பெடுத்தாடிய அவிஸ்க பெர்னான்டோ 23 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்களோடு 53 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் திசர பெரேராவும் தன் பங்குக்கு 6 ஆறுகள், 2 நான்குகள் உள்ளடங்கலாக 21 பந்துகளில் 53 ஓட்டங்களைச் சேர்க்க, ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 181 ஓட்டங்களைக் குவித்தது.