ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ வீரர்கள், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
ஈடுசெய்ய முடியாத இழப்பில், தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர்.
அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்களின் மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
விபத்தில் உயிரிழந்திருக்கும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.