சமையல் எரிவாயு மிகவும் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்குதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அபோன்று தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.
சிறு கைத்தொழில் முயற்சிகளுக்கு வங்கிக்கடன்கள் மூலம் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுப்பதாக அரசு கூறியிருந்தது.
ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இதனால் முன்னாள் போராளிகள் வறுமை காரணமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை உள்ளது. பலர் தற்கொலையும் செய்துள்ளனர்.
மேலும் பல முன்னாள் போராளிகள் வீதிகளில் கையேந்தி யாசகம் பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசு எந்த வசதி வாய்ப்புக்களையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.