பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது.
ஈரானுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மீண்டும் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனைகளை முன்வைக்க வேண்டும் என ஐரோப்பியக் குழுத் தலைவர் என்ரிக் மோரா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.
அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவர் மீண்டும் விதித்தார்.
அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது. அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.