இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய சாணக்கியன், “பாகிஸ்தானின் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களையும் கூறிக்கொள்கிறேன். இந்தச்சம்பவம் தொடர்பாக எமது இளைஞர்கள் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக அனுதாபங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் நியாபகப்படுத்த விரும்புகிறேன். 1956- 57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.
குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் சாணக்கியனின் குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“சிற்சில அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட சில சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதாவது புலிகள் அங்கு இராணுவத்தைக் கொல்லும்போது, அதனால் கொதிப்படைந்த மக்கள் குழப்பமடைந்திருக்கலாம். அதேபோல யாழ். நூலகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரசியல் பிளவுகளால் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்றன.
ஆனால் பாகிஸ்தானில் நடந்த சம்பவம் அவ்வாறு அல்ல. சுவரில் இருந்த போஸ்டரை அகற்றியதால் அந்நபரை கொடூரமாகக் கொன்றுள்ளனர். இலங்கையில் நடந்தவை சரியென நான் கூற விளையவில்லை. ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு சமப்படுத்த முற்பட வேண்டாம்.
நீங்கள் கண்டியில் படித்த எம்.பி., கண்டி மக்கள் உங்களுடன் எப்படி பழகினார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே, நியாயமாக உரையாற்றுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.