இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 4.30 மணிக்கு இஸ்ரேலில் இருந்து நாஃப்டாலி பென்னட் தனது எல் அல் இஸ்ரேல் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பென்னட்டின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலிய தலைவர் அபுதாபிக்கு வந்ததை உறுதிப்படுத்தினார்.
அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் முதல் இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட், என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வல்லரசுகள் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிக்கும் போது பிராந்திய பதற்றம் அதிகரித்த நேரத்தில் வளைகுடா உறவுகளை வலுப்படுத்த இஸ்ரேல் பிரதமர் முயலுகின்றார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சுற்றுப் பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஸயீது அல்-நாஹ்யானை அபுதாபியில் சந்தித்து நாஃப்டாலி பென்னட் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவில் இருந்து புறப்படுவதற்கு முன், பென்னட், தானும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யானும் திங்கள்கிழமை சந்தித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினார்
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் ‘ஆபிரகாம் உடன்படிக்கைகள்’ என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்துடன் இஸ்ரேல் நல்லுறவை பேணி வருகின்றது.