இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:20 மணியளவில் புளோரஸ் கடலில் 76 கிலோமீட்டர் (47 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள மௌமரேக்கு வடக்கே 91 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை நினைவுக்கூறத்தக்கது.
கடைசியாக 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது. டிசம்பர் 26ஆம் திகதி, வடமேற்கு சுமத்ரா கடற்கரையில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் 9 நாடுகளில் 230,000க்கும் அதிகமான மக்களின் உயிரை காவுக்கொண்டது.