ஆப்கானிஸ்தானில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு, எந்த அமெரிக்க துருப்புகளும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலின் போது, ஒரு தன்னார்வ ஊழியர் மற்றும் ஏழு சிறுவர்கள் உட்பட குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க துருப்புக்களை கொன்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது.
தன்னார்வ ஊழியரின் கார் இஸ்லாமிய அரசாங்த்தின் உள்ளூர் கிளையான ஐ.எஸ்.கே உடன் தொடர்புடையதாக அமெரிக்க உளவுத்துறை நம்பியது. இதனடிப்படையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், தாக்குதலின் பின்னர், கடந்த 29ஆம் திகதி அமெரிக்க மத்தியக் கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி இதுவொரு துக்ககரமான தவறு என விபரித்தார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு உயர்மட்ட உள்ளக மதிப்பாய்வில், எந்த சட்டமும் மீறப்படவில்லை என்பதால், ஒழுக்காற்று நடவடிக்கை தேவையில்லை என்றும், தவறான நடத்தை அல்லது அலட்சியத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்ததாக பல அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.