ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டில் தாங்கள் மிகத் தெளிவாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.
இதேநேரம், மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபடுவது தங்களுக்கு மிக மனவேதனையாக உள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இரா.சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.