உய்குர் முஸ்லிம்களின் கட்டாய உழைப்பு காரணமாக சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.
இது வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதற்றத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. அந்த மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவை என தொழிலகங்கள் உறுதிப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும்.
உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டம் இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் செனட்டில் ஒருமனதாக நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இது ஜனாதிபதி ஜோ பைடனால் கையொப்பமிடப்பட வேண்டும்.
ஸின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. உய்குர் இன மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, அவர்களை முகாம்களில் அடைத்து கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, இதே குற்றச்சாட்டுக்காக சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜீய புறக்கணிப்பு செய்யப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதிய தடைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா ஏற்கெனவே மறுத்துள்ளது.