அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.
அதேபோல் சுயநிர்ணய உரிமைக்காகவும், தேச விடுதலைக்காகவும் செயற்படுபவர்களையும் போராடுபவர்களையும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்து ஒடுக்கும் செயற்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் மட்டுமல்லாது பயங்கரவாத செயல் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக இலங்கை சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.