கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கை, கட்டுப்பாட்டு எல்லையின் இருபுறமும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.