இந்தியக் கிரிக்கெட் அணியில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றுள்ளார்.
வாய்ப்பு இல்லாமை மற்றும் உடற்தகுதி, வயது உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி 41 வயதாகும் ஹர்பஜன் சிங் தனது ஓய்வு அறிவிப்பினை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
கடந்த 1998ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்பஜன் சிங், மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி அணிக்காக பல வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவுசெய்துள்ளார்.
அவர் தனது ஓய்வு அறிவிப்பில், ‘அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிற்கு இன்று விடைபெறுகிறேன், இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் மனமார்ந்த நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டாக கிரெக் ப்ளெவெட்டை வீழ்த்தினர்.
அதே ஆண்டில், ஷார்ஜாவில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் தனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். அவரது முதல் விக்கெட் மெட் ஹோர்ன் ஆகும்.
இருப்பினும், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒஃப்- ஸ்பின்னர் மிகப்பெரிய உச்சத்தை தொட்டார்.
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா மறக்கமுடியாத வகையில் வென்றது.
சென்னையில் நடந்த அந்த தொடரில் 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை குவித்து தனது சிறந்த டெஸ்ட் சாதனையையும் பதிவு செய்தார்.
2003ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணத்தில் உச்சநிலை மோதலை எட்டிய இந்திய அணியில் ஹர்பஜனும் முக்கிய பங்கு வகித்தார்.
இறுதியில் 2011ஆம் ஆண்டு அவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெல்ல மிகப்பெரும் உதவியாக இருந்தார்.
2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
2010ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அவர் அடித்த இரண்டு டெஸ்ட் சதங்கள் மூலம் அவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற பெயரையும் முத்திரை பதித்தார்.
2002ஆம் ஆண்டு லீட்ஸ் மற்றும் 2010-11 பருவக்காலத்தில் டர்பனில் முறையே நான்கு மற்றும் ஆறு விக்கெட்டுகளுடன் இந்தியாவின் மறக்கமுடியாத வெளிநாட்டு வெற்றிகளில் ஹர்பஜனும் ஒருவராக இருந்தார்.
2010-11ஆம் ஆண்டு பருவக்காலத்தில்; கேப் டவுனில் சமநிலையில் முடிவடைந்த தொடரில், 120 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த டெஸ்ட் சாதனையை பதிவுசெய்யதார்.
கடந்த 2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 போட்டியில், ஹர்பஜன் ரி-20 கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். அவர் இதுவரை 28 ரி-20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும். சராசரி 25.32 ஆகும். இறுதியாக 2016ஆம் ஆண்டு ரி-20 ஆசிய கிண்ண தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார்.
இதுவரை 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை ஹர்பஜன் வீழ்த்தியுள்ளார். 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும். சராசரி 33.36 ஆகும்.
அவர் இறுதியாக 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
மேலும், ஹர்பஜன் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒரு இன்னிங்ஸில் 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் மற்றும் ஒரு போட்டியில் 217 ஓட்டங்களுக்கு 15 விக்கெட்டுகள் என்பதே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
சராசரி 32.46 ஆகும். அவர் இறுதியாக 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
ஹர்பஜன் 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 19 சராசரியில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஐபிஎல்லில் அவரது சிறந்த சீசன்.
1997ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் வெர்சஸ் சர்வீசஸ் அணிக்காக முதல்தரப் போட்டியில் அறிமுகமான மூத்த ஒஃப் ஸ்பின்னர் ஹர்பஜன், 198 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 780 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.