ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை வேகபந்து வீச்சாளரான ஸ்கொட் போலண்ட் தனது டெஸ்ட் அறிமுகத்தை பெறுகிறார். இதன்மூலம் பேகி கிரீன் அணிந்த நான்காவது பழங்குடியினராக போலண்ட் இருப்பார்.
அதேபோல, உபாதையின் காரணமாக ஓய்வில் இருந்த அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்குள் வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருவரும் அணிக்குள் வருவதன் விளைவாக, ஜே ரிச்சர்ட்சன் மற்றும் மைக்கேல் நெசர் ஆகியோர் வெளியேறுவார்கள்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ரிச்சர்ட்சன் அடிலெய்டில் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் டெஸ்ட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அவுஸ்ரேலிய அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
பெட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், டேவிட் வோர்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அணியில் நான்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜோனி பேர்ஸ்டோவ், ஜெக் லீச், ஸெக் க்ராவ்லி மற்றும் மார்க் வுட் ஆகியோர் ஒல்லி போப், ஸ்டூவர்ட் பிராட், றொரி பர்ன்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இடம் பெற்றுள்ளனர்.
முதல் இரண்டு டெஸ்டில் போப் மற்றும் பர்ன்ஸ் ஆகியோரால், முறையே 48 மற்றும் 51 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மறுபுறம், இந்த தொடரில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் முறையே மூன்று மற்றும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
ஜோ ரூட் தலைமையிலான அணியில், ஹசீப் ஹமீத், ஸெக் கிராவ்லி, டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஜோனி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வுட், ஒல்லி ரொபின்சன், ஜெக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆகவே எதிர்வரும் பொக்ஸிங் டே டெஸ்ட் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. எனவே இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, நாளை மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.