தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன், தொடர்புடைய நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு உள்ள நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10ஆவது நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் பயணத் திகதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விபரங்களைப் பதிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் தொற்று இல்லையென முடிவு வந்திருக்க வேண்டும் என்றும் இதில் போலியான தகவல் என கண்டறியப்பட்டால் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..