அரசாங்கம் தற்போது தமது தவறுகளை அதிகாரிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தன்மீது குறைபாடுகளை வைத்துக்கொண்டு பொதுமக்களை அரசாங்கம் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்று கொண்டு அதன்படி அமைச்சின் செயலாளர்கள் செயற்பட்டமையின் விளைவே இந்த பின்னடைவுக்கு காரணம் என கூறினார்.
குறிப்பாக இரசாயன உரத்திற்கு பதிலாக இயற்கை உரங்களை அமுல்படுத்துவதற்கு விவசாய அமைச்சு ஆதரவை வழங்கவில்லை என்றும் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பலவீனமான நிதி முகாமைத்துவதினால் டொலர் நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும் எரிபொருள் விலையை குறைப்பதை தவிர்க்க அரசாங்கம் இதனை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்துவதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.