பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளதாக அந்தச் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது, வைத்தியர்களின் இடமாற்றல் சபையின் அனுமதியின்றி விஷேட வைத்தியர்களுக்கான நியமன பட்டியலைத் தயாரித்தல், வைத்திய இடமாற்றல் சபையின் அனுமதியின்றி தர வைத்தியர்களை இணைத்துக்கொள்ளல், 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற பட்டியலைத் தயாரிக்காமை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், இந்த கோரிக்கைளை முன்னிறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.