இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவ்வாறு அவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடுக்கு அரசாங்கமே காரணமென நேரடியாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
அத்தோடு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பன மக்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மரக்கறிகள் விலை அதிகரிப்பு, எரிவாயு தட்டுப்பாடு, உர பிரச்சினை என மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்கள் அமைந்துள்ளன என்றும் இதற்கு விவசாயத்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் மேலிடத்தில் தீர்மானம் எடுக்கும் நபர்கள் பொறுப்புக்கூறியாக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
சுசில் பிரேமஜயந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.