டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர்.
கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து, குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இதன்போதே, சந்தேகநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் அதன்பின்னர், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.