யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை போன்ற ஆதார மருத்துவமனைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின் அந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை – 021 226 3262 தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை – 021 205 9227 சாவகச்சேரி ஆதார மருத்துவமனை -021 227 1150 ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனை – 021 221 1660 இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். (உதாரணமாக – உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை) அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.