ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 308 மில்லியன் டொலர்களையும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டமிடுவதாக தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதை அடுத்து நாடு மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் இந்த நிதியானது, சுயாதீன மனிதாபிமான நிறுவனங்கள் ஊடாக வழக்கங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டமான கோவ்கஸ் மூலம் மேலதிகமாக ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளையும் அமெரிக்கா வழங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 2021 முதல் புதிய உதவி உட்பட நாட்டிற்கு 782 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.