எமது மக்களின் இல்லங்களில் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபத் தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாள் என்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர்.
உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாகவும், மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்குமிடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசார பண்டிகையான தைப்பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் திருவிழாவாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
உலக வாழ் தமிழ் மக்கள் தொன்று தொட்டு மேற்கொண்டு வரும் மனிதன் சூரிய பகவான் மீதான வழிபாட்டின் வெளிப்பாடாகவும் தைப்பொங்கல் இருந்து வருகின்றது.
இந்த தை திருநாளில் தமிழ் மக்களுக்கும் நாட்டின் ஏனைய இன மக்களுக்கும், நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க எனது நல்வாழ்த்துக்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.