அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், ‘உக்ரைனையே சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த மற்ற நாடுகளையோ நேட்டோ அமைப்பு தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கிறது.
ஆனால், அவ்வாறு உத்தரவாதம் அளிக்க நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் பிடிவாதமாக மறுத்து வருகின்றன.
அந்த வகையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான அணுகுமுறை எதிரும் புதிருமாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அதனை எதிரகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொள்ளும்.
அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் ரஷ்யப் படைகளைக் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது’ என கூறினார்.