2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக அனைத்து புனிதர்களின் திருச்சபையின் பரிஷ் சபை ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்க நடவடிக்கை எடுத்தவர்களின் கோழைத்தனமான மற்றும் பகுத்தறிவற்ற செயல்களை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய பரிஷ் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “18ஆம் நூற்றாண்டிலிருந்து ஏராளமான மக்கள் வழிபட்டு, ஆறுதலும் அமைதியும் கண்ட இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் இந்தச் செயல்கள், அவர்களின் பரிஷ் சமூகத்தின் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தேசியத்தின் வேர்களையே பாதிக்கும்.
சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பதற்கு முன்னதாகவே சந்தேக நபர்களைக் கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சரியாகக் கவனத்தில்கொள்ளாமல் நடந்துகொண்ட விதம் குறித்து ஆல் செயின்ட்ஸ் சர்ச்சின் பரிஷ் சபை கவலை கொண்டுள்ளது.
சம்பவத்தன்று பிற்பகல் 3:00 மணிக்குப் பின்னரே சிசிடிவி காட்சிகளை பொலிஸ் கோரியது ஏன்? இந்த பின்னணியில் ஒரு பெரிய மர்மம் உள்ளது. மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மிகவும் பொருத்தமான ஆதாரங்களை வலியுறுத்தினார். சம்பவம் நடந்த அன்று காலை சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.
இந்த விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், இந்த விசாரணைகளை அனைத்து நியாயமான திறமை, கவனிப்பு மற்றும் உரிய விடாமுயற்சியுடன் கையாளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் அரசாங்கத்திடமும் மிகவும் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.