மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல், பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாடிஸ் மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது.
அந்த மாவட்டத்தில் மிக அதிக அளவில் கட்டட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தானிலேயே எந்தவித வசதிகளும் இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அந்த மாகாணத்தின் கலாசார மற்றும் செய்தித் துறை தலைவர் பஸ் முகமது சர்வாரி தெரிவித்துள்ளார்.