அமெரிக்காவின் மான்சாண்டோ அக்ரிபிசினஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் வகையிலான வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக நீதிமன்றத்தில் சீன நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசோரியின் செஸ்டர்ஃபீல்டில் வசித்து வந்த 44வயதான சீனப் பிரஜையான சியாங் ஹைடாவோ, பொருளாதார விடயங்களை உளவு பார்த்தல், மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, குறித்த சீனர், சென்.லூயிஸை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச நிறுவனமான மான்சாண்டோவிடமிருந்து வர்த்தக இரகசியத்தைத் திருட சதி செய்ததாகவும் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு, அதாவது மக்கள் குடியரசின் நன்மைக்காகவே அவ்வாறு செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறையின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் உதவி சட்டமா அதிபரான மெத்யூ ஜி. ஓல்சன் ‘மான்சாண்டோவின் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான சியாங்கின் ஒப்பந்தங்கள் மற்றும் அதற்கான கடமைகள் குறித்து பலமுறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், மான்சாண்டோவிடமிருந்து வர்த்தக இரகசியத்தைத் திருயுள்ளார். பின்னர் அதனை மாற்றியமைப்பதற்கு முயன்றுள்ளார். அதனை மென்பொருள் சேமிப்பில் பதிவு செய்து மக்கள் சீனக் குடியரசுக்கு எடுத்துச் செல்வதற்கு முயன்றுள்ளார்’ என்று அவர் குறிப்பிட்டார்.
மிசோரியின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் சைலர் ஃப்ளெமிங் கூறுகையில் ‘சியாங் மதிப்புமிக்க வர்த்தக இரகசியங்களை திருட பெரிய சர்வதேச நிறுவனத்தில் தனது உள் அந்தஸ்தைப் பயன்படுத்தினார்’ என்றார்.
அத்துடன், அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வசித்து வந்த சியாங், மான்சாண்டோ மற்றும் அதன் துணை நிறுவனமான தி க்ளைமேட் கோர்ப்பரேஷன் நிறுவனத்தில் 2008 முதல் 2017 வரை விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் சீனாவுக்குச் சென்றிருந்தார். அவர் மீள அமெரிக்கா வரும் நோக்குடன் சீனாவுக்குச் செல்லவில்லை. அவர் ஒருவழிப் பயணச் சீட்டையே பெற்றிருந்தார்’ என்றும் குறிப்பிட்டார்.
2017 ஜூனில் அமெரிக்க விமான நிலையத்தில் இவர் சீனாவுக்கு பயணம் செய்வதற்காக காத்திருந்தபோது, மின்னணு சாதனத்தில் வர்த்தக இரகசியம் மற்றும் அறிவுசார் சொத்தாகக் கருதப்படும் மான்சாண்டோ தனியுரிமங்கள் ஆகியவற்றின் நகல்களை அமெரிக்க அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
எனினும், அச்சமயத்தில் குறித்த மின்னணு சாதனத்தினை ஒப்படைத்துவிட்டு தனது சீனப் பயணத்தினை தொடர்ந்த சியாங் தனது சொந்த நாட்டிற்குச் சென்று அறிவியல் கல்லூரியில் மண் அறிவியல் நிறுவனமொன்றில் பணிபுரிந்தார், பின்னர் அவர் அமெரிக்கா திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
குறித்த குற்றத்திற்காக சியாங்கிற்கு ஏப்ரல் 7ஆம் திகதி தண்டனை விதிக்கப்படவுள்ளது. அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.