இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று நண்பகல் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக 1.8 மில்லியன் லீற்றர் டீசல் கிடைத்துள்ளதாக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தன.
இதன்காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ள 10,000 மெற்றிக் தொன் எரிபொருள் ஐந்து நாட்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்திற்கு போதுமானதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.