திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்த வேளை 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார். அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் – வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் – எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் – ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.