பசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது.
சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட மூன்று பேரைத் தவிர வேறு எந்த இறப்புகளையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. இரண்டு டசன் பேருக்கு குறைவானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நோமுகா தீவைச் சேர்ந்தவர்கள்.
பாதிக்கப்பட்ட மூவரும் நோமுகாவைச் சேர்ந்த 49 வயதான லதாமௌமி லௌகி, டெலாய் டெடுயிலா, மெங்கோவைச் சேர்ந்த 65 வயதுடையவர் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஏஞ்சலா குளோவர் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான தீவுகளில் ஒன்றான மெங்கோவில் உள்ள 62 பேர் தங்கள் வீடுகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட உடமைகள் அனைத்தையும் இழந்த பிறகு நோமுகாவிற்கு குடிபெயற வேண்டியிருந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இருந்த மருத்துவ முகாம்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் அங்கு கள மருத்துவமனையை அமைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், உணவு மற்றும் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த குடியிருப்பாளர்களில் பலர் மீண்டும் பிரதான தீவான டோங்காடாபுவுக்கு மாற்றப்படலாம் என்று அரசாங்கம் மேலும் கூறியது.
தீவுகளில் தண்ணீர் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், சாம்பல் வீழ்ந்த போதிலும், சமீபத்திய நாட்களில் சோதனைகள், நிலத்தடி நீர் மற்றும் மழைநீரை குடிக்க பாதுகாப்பானவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தீவின் ஒரே விமான நிலைய ஓடுபாதையை உள்ளூர்வாசிகள் இறுதியாக அகற்றியதை அடுத்து, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய வெளிநாட்டு உதவி விமானங்கள் டோங்காவை வந்தடைந்துள்ளன.