இந்திய வெளிவிவகார அமைச்சர் காலாநிதி ஜெய்சங்கர், நேபாள வெளிவிவகார அமைச்சர் நாராயண் கட்காவுடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததோடு இரு நாடுகளின் கூட்டுறவில் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவொன்றைச் செய்துள்ள ஜெய்சங்கர், ‘இரு தரப்பினரும் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.
நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் நாராயண் கட்காவுடன் புத்தாண்டில் கலந்துரையாடினேன். பல துறைகளில் முன்னேற்றம் காண வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக கூட்டாண்மை வளர்ச்சி மற்றும் கொரோனா ஒத்துழைப்பு ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. எங்கள் ஒத்துழைப்பினை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டோம்’ என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா, நாராயண் கட்காவை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். இதற்கிடையில், ஷேர் பகதூர் டியூபா நான்கு நாள் பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
பிரதமர் ஷேர் பகதூர் டியூபா தனது இந்தியப் பயணத்தின் போது பிரதமர் மோடியுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். ஐந்தாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு ஷேர் பகதூர் டியூபா இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.