லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்த உதவும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளது.
பசிபிக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட குறித்த உடன்படிக்கை முக்கியமானது என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பசிபிக் கூட்டமைப்பு நாடுகளில் தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.
லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளுக்கான சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம், முதலீட்டில் பசிபிக் கூட்டமைப்பு நாடுகள் மூன்றில் ஒரு பங்குக்குப் பொறுப்பு வகிக்கின்றன.
புதிய உடன்படிக்கை ஊடாக, தென்கிழக்காசியச் சந்தையைத் தெரிந்து கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளைப் பெறவும் பசிபிக் கூட்டமைப்பின் இன்னும் அதிகமான நிறுவனங்கள் சிங்கப்பூரை வாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.