பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே கம்பளையில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக ஒப்புக்கொண்டார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த வார தொடக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் முள்ளந்தண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், தான் தனது தந்தையை பார்க்கச் செல்லவில்லை எனவும், வேறு நோயாளியை பார்க்கவே வைத்தியசாலைக்கு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், நேற்று(வியாழக்கிழமை) கம்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, சத்திரசிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருந்ததால், பிரதமர் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.