லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸின், முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணை ஜனாதிபதி ; கமலா ஹாரிஸ் பங்கேற்றார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் உரையாற்றிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக உறுதிமொழி அளித்தார். அத்துடன், சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார்.
62 வயதான காஸ்ட்ரோ, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சமாளித்து, கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களை தாராளமாக்குவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி, சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெகுசிகல்பா மேயர் நஸ்ரி அஸ்ஃபுரா, 34 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோண்டுராஸில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.
சியோமாரா காஸ்ட்ரோ, முன்னாள் ஜனாதிபதி மானுவல் ஜெலயாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ட்ரோவின் கணவர மானுவல் ஜெலயா, 2006 முதல் 2009 வரை நாட்டை ஆட்சி செய்தார்,. அவர் சதிப்புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு முறை பதவிக்கு போட்டியிட்டார்.