ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பேரில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அற்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இரகசிய நோக்கத்தை சுட்டிக்காட்டும் வகையிலேயே நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
1972 ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முறையாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது என அவர் தெரிவித்தார்.
ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை தடுக்கக்கூட முடியவில்லை என சுட்டிக்காட்டினார்.
அதன்படி இம்முறையும் இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல், எமது நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை நிறைவேற்றும் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கருத்தாக்கம், புதிதாக அறிமுகம் செய்யப்படும் அரசியல் அமைப்பிலிருந்து மாகாண சபையை நீக்குவதற்கான ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கேட்பது, தமிழர்களாக அதிக அதிகாரம் கிடைக்கும் எனும் காரணத்திற்காக அல்ல, மாறாக இந்தத் திருத்த சட்டம் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அதிகாரம் முழுதுமாக சுரண்டப்பட்டுவிடும் என்பதாலே என்றும் கூறினார்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தேடவில்லை என்றும் மாறாக ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்பதனாலேயே இதனை கோருவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.